Everything is God.Never.Everything is God's.

இறைவன் ஒன்றுதான் அதில் எந்த இறைவன் உண்மையானவன்? உலக ஆதமுடைய மக்களுக்காக டாக்டர் ஜாகிர் நாயக்கின் கேள்வி - பதில்கள் மற்றும் அவரது கட்டுரைகள் , விவாதங்கள் இங்கே பதியப்படும்

Wednesday, November 7, 2007

முஸ்லிம் மன்னர்களின் போர்கள்

முஸ்லிமல்லாதவர்களை மதமாற்றம் செய்வதற்காகவும், மறுப்பவர்களைக் கொன்று குவிப்பதற்காகவும், பிறநாட்டில் உள்ள அழகு மங்கையரைக் கவர்ந்து செல்வதற்காகவும், அங்குள்ள செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்காகவும், முஸ்லிம்கள் படையெடுத்து உள்ளனர் என்றும்,
இஸ்லாம் பிறமதங்களைச் சகித்துக் கொள்ளாத மார்க்கம் என்பதற்கும் அருவாள் முனையில் பரப்பப்பட்ட மார்க்கம் என்பதற்கும் இந்தப் போர்களும் படையெடுப்புகளும் சான்றுகளாக உள்ளன, என்பது முஸ்லிமல்லாதவர்கள் அடிக்கடி எழுப்பிவரும் குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்।


முகலாய மன்னர்களும், வேறு பல முஸ்லிம் மன்னர்களும் இந்தியாவின் மீது படையெடுத்து வந்ததையும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் ஏராளமான போர்களை நிகழ்த்தியுள்ளதையும் தங்கள் வாதத்துக்குச் சான்றாக அவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பல போர்களைச் சந்தித்ததும் உண்மை.

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்ததும் உண்மை.

ஆயினும் இவற்றை ஆதாரமாகக் கொண்டு எடுத்து வைக்கப்படும் வாதங்கள் தாம் உண்மைக்கு அப்பாற்பட்டவை.

இவர்கள் எடுத்துக் காட்டுகின்ற இரண்டு ஆதாரங்களையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இவர்கள் கூறுகின்ற காரணங்களுக்காகப் போர் செய்திருந்தால் அதைக் காரணமாகக் கொண்டு இஸ்லாத்தை விமர்சனம் செய்வதில் நியாயம் உள்ளது. அவர்களைத் தவிர ஏனைய முஸ்லிம் மன்னர்கள் எந்தக் காரணத்துக்காகப் போர் செய்திருந்தாலும் அதற்காக இஸ்லாத்தை விமர்சிப்பது அறிவுடைமையாகாது.

ஆகவே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சந்தித்த போர்களைப் பற்றி மட்டும் விளக்குவதுதான் நமது பொறுப்பாகும். ஆயினும் நாம் வாழக்கூடிய நாட்டில் முஸ்லிம் மன்னர்கள் படையெடுத்து வந்தது பற்றியே பிரதானமாகப் பேசப்படுவதால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்புகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாவிட்டாலும் அதுபற்றி சுருக்கமாக ஆராய்ந்து விட்டு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சந்தித்த போர்களைப் பற்றி ஆராய்வோம்.

அன்றைய காலத்தில் போர்கள் சர்வ சாதாரணமாக நடந்து வந்தன. மன்னர்களின் சுயநலத்திற்காகப் போர்ப் பிரகடனம் செய்யப்பட்டதுண்டு.

அன்றைக்கு தனித்தனி நாடுகளாக விளங்கிய சேர, சோழ, பாண்டிய நாட்டு மன்னர்கள் ஒருவருடன் ஒருவர் போர் புரிந்த வரலாறு உண்டு. அன்றைக்குத் தனி நாடாக விளங்கிய வடநாட்டின் மீது பாண்டிய மன்னன் படை நடத்திச் சென்று வெற்றி பெற்ற வரலாறும் உண்டு. இந்த நாட்டைச் சுரண்டுவதற்காக ஆரியர்கள் படையெடுத்து வந்த வரலாறும் உண்டு. மத நம்பிக்கையில்லாத திராவிடர்கள் மீது ஆரியர்கள் இந்து மதத்தை திணித்த வரலாறும் உண்டு.

பலநாடுகள் மீது படையெடுத்துச் சென்ற அலெக்சாண்டரின் வீர(?) வரலாறும் உண்டு. வெள்ளையர்கள் இந்த நாட்டைக் கைப்பற்றிக் கொண்ட சமீபத்திய வரலாறும் உண்டு. தங்கள் நாட்டு எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்வதற்காகவும், பகைமை கொண்டிருந்த அண்டை நாட்டு மன்னனுக்குப் பாடம் புகட்டுவதற்காகவும், வளங்களை வாரிச் செல்வதற்காகவும் எத்தனையோ படையெடுப்புகளை உலகம் சந்தித்துள்ளது அது போன்ற ஒரு படையெடுப்பே முகலாயர்களின் படையெடுப்பும்.

முஸ்லிம் படையெடுப்புகள்

வெண்ணி, வாகை, புள்ளலுர் பரியலம், மணி மங்கலம், நெய்வேலி, பெண்ணாடகம், விழிஞம், தெள்ளாறு, திருப்புறம்பியம், வெள்ளூர், தக்கோலம், நொப்பம், கூடல், கலிங்கம், ஈழம், சுமந்திரம், மகேந்திரமங்கலம், மற்றும் கண்ணனூர் ஆகிய போர்கள் தமிழக அளவில் இந்து மன்னர்கள் நிகழ்த்திய போர்களில் சில. இன்னும் ஏராளமான போர்கள் தமிழக அளவிலும் இந்திய அளவிலும் நிகழ்ந்துள்ளன.

இந்தப் போர்களுக்கெல்லாம் எவை காரணமாக இருந்தனவோ அவைதாம் முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்புக்கும் காரணங்களாக இருந்தன. நிச்சயமாக மதத்தைப் பரப்புவதோ மதமாற்றம் செய்வதோ இதற்குக் காரணங்களாக இருந்ததில்லை.

முஸ்லிம் மன்னர்கள் 800 ஆண்டுகாலம் இந்த நாட்டை ஆட்சி புரிந்தனர். இந்து மதத்தை அவர்கள் அழிக்க நினைத்திருந்தால் அதற்கு 800 ஆண்டுகள் மிகவும் அதிகமாகும். அதற்கு குறைவான ஆண்டுகளிலேயே அழித்திருக்க முடியும்.

அவர்கள் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை இடிக்கவில்லை. ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆலயங்கள் இதற்கு இன்றளவும் சாட்சியமளித்துக் கொண்டிருக்கின்றன.

இந்துக் கோவில்களைக் கட்டிய முஸ்லிம் மன்னர்களும் அவற்றுக்கு மானியம் வழங்கிய முஸ்லிம் மன்னர்களும் இருந்துள்ளனர்.

இஸ்லாம் தடை செய்துள்ள ஆடல் பாடல்களை அவர்கள் தடை செய்ததில்லை. வட்டியை அவர்கள் ஒழித்ததில்லை. குற்றங்களுக்கு இஸ்லாம் கூறக்கூடிய தண்டனைகளை அவர்கள் சட்டமாக்கவில்லை. அரசுப் பதவிகளில் முஸ்லிமல்லாதவர்களை பெருமவு நியமிருத்திருந்தார்கள். முஸ்லிமல்லாத பெண்களை மணந்தார்கள்.

இன்னும் இஸ்லாத்தின் ஆயிரமாயிரம் கட்டளைகளைப் புறக்கணித்தவர்கள் இஸ்லாத்தை இந்த நாட்டில் பரப்ப வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பார்களா? நடுநிலையாக யோசிக்க வேண்டும்.

இஸ்லாத்தை விட்டும் வெகுதூரம் விலகியிருந்த முஸ்லிம் மன்னர்கள் வாளால் மிரட்டி இந்திய மக்களை முஸ்லிம்களாக்கினார்கள் என்று நியாயவுணர்வுடைய எவருமே கூறத்துணிய மாட்டார்.

நவீன ஆயுதங்களுடன் இந்த நாட்டை அடிமைப்படுத்திய வெள்ளையர்களை 200 ஆண்டுகளில் நாட்டு மக்கள் விரட்டியடித்தனர். அதற்கு முன்பே அவர்களை வெளியேற்ற ஏராளமான போராட்டங்கள் நடந்துள்ளன.

ஆனால் முஸ்லிம் மன்னர்கள் கத்தி, அரிவாள், வாள், கேடயம் போன்ற சாதாரண ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட காலத்தில் ஆள்பலமே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்ற காலத்தில் 800 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளனர்.

முஸ்லிம் மன்னர்கள் மதமாற்றம் செய்வதில் ஈடுபட்டிருந்தால் வாள் முனையில் மிரட்டியிருந்தால் ஒரு சதவிதத்துக்கும் குறைவாக இருந்த அவர்களை இந்த நாட்டு மக்கள் வெறும் கையாலேயே அடித்து விரட்டியிருப்பார்கள். முஸ்லிம் மன்னர்கள் இந்நாட்டில் 800 ஆண்டுகள் ஆட்சி புரிந்தது அவர்கள் மக்களைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யவில்லை என்பதற்குச் சான்றாக உள்ளது.

ஆயினும் ஒரு விஷயத்தை நாம் உறுதியாகச் சொல்ல முடியும். மோசமான நடத்தையுடைய முஸ்லிம் மன்னர்களின் மோசமான ஆட்சி அதற்கு முன் நடந்த மன்னர்களின் ஆட்சிகளை விட சிறப்பானதாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் மிகச் சிறு படையுடன் வந்தவர்களை இந்திய மக்கள் பல நூற்றாண்டுகள் வரை சகித்துக் கொண்டிருக்க முடியாது.

இந்துக்களின் போர்களுக்கெல்லாம் இந்துமதம் தான் தூண்டிவிட்டது என எப்படி கூறமுடியாதோ அது போலவே முஸ்லிம்கள் நிகழ்த்திய போர்களை எல்லாம் இஸ்லாமே தூண்டிவிட்டது எனக் கூறமுடியாது.

சுருக்கச் சொல்வதென்றால் வாள்முனையில் எந்த மதத்தையும் பரப்ப முடியாது। பரப்பமுடியும் என்றாலும் இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் நிச்சயமாக யாரையும் வற்புறுத்தி மதமாற்றம் செய்ததில்லை. அப்படியே செய்திருந்தார்கள் என்பதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் அதற்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை. ஏனெனில் திருக்குர்ஆனில் கூறப்பட்டவையும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காட்டிய வழியும் தான் இஸ்லாம். முஸ்லிம் பெயர் தாங்கிகளின் தவறான செயல்களுக்கு இஸ்லாம் பொறுப்பாகாது.


இம் மார்க்கத்தில் எந்தவித நிர்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர் வழி தெளிவாக உள்ளது. (அல்குர்ஆன் 2:256)

நன்றி :பி ஜெய்னுலாப்தீன்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home